இந்தியா

மேற்கு வங்கம் இனி 'பஷ்சிம் பங்கா'.. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!

By Christon
07 Oct 2026, 09:53 PM
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய மாநில அரசு சட்ட மசோதா கொண்டு வர உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்திலும் இனி 'பஷ்சிம் பங்கா' (Paschimbanga) என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் வகையில், மாநில சட்டப்பேரவையில் விரைவில் சட்ட மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சமிக்க பட்டாசார்யா தெரிவித்துள்ளார்.

வடக்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சமிக்க பட்டாசார்யா, மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு தனித்துவமான அரசியல் வரலாறு இருப்பதாகக் குறிப்பிட்டார். சியாமா பிரசாத் முகர்ஜி, ஆச்சார்யா தேவபிரசாத் கோஷ் போன்ற தலைவர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்காலம் மறந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.

மேலும், "அங்கம், வங்கம், கலிங்கம் போன்ற வரலாற்றுப் பகுதிகளை அனைவரும் அறிவர். 1947 ஜூன் 20 அன்று மேற்கு வங்கம் தனி மாநிலமாக உருவெடுத்த போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்து எம்.எல்.ஏ-க்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கும் நோங்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டதாகக் கூறிய அவர், மாநிலத்தின் பெயர் அனைத்து மொழிகளிலும் 'பஷ்சிம் பங்கா' என்றே இருக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றார். இது வெறும் தனிநபர் கோரிக்கையோ அல்லது பாஜக தொண்டர்களின் விருப்பமோ மட்டுமல்ல, வரலாற்றுப் பின்னணி கொண்ட கோரிக்கை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநிலத்தின் பெயரை 'மேற்கு வங்கம்' என்பதிலிருந்து 'பெங்கால்' அல்லது 'பங்களா' என மாற்றப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அகரவரிசைப்படி (Alphabetical order) 'W' எழுத்து இறுதியில் வருவதால், தேசிய அளவிலான கூட்டங்களில் மேற்கு வங்கப் பிரதிநிதிகள் பேசுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பதை அவர்கள் முதன்மை காரணமாக முன்வைத்தனர்.

இதற்காகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் அந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.