கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் மிரட்டல் செய்தி கண்டறியப்பட்டதை அடுத்து, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை கண்ணாடியில், விமானத்தைக் கடத்தப்போவதாக அச்சுறுத்தும் வகையில் எழுதப்பட்ட செய்தி ஒன்றைப் பணிப்பெண்கள் கண்டறிந்தனர். உடனடியாக இந்த விவகாரம் குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து செயல்பட்டு கொல்கத்தா வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் (ATC) தொடர்புகொண்டு அவசர எச்சரிக்கை விடுத்தார்.
தகவல் கிடைத்த உடனே, புறப்பட இருந்த அந்த விமானம் உடனடியாகப் பாதுகாப்பு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய அனைத்துப் பகுதிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. விமான குழுவினர் 5 பேர் உட்பட, 93 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட இருந்த விமானம் கொல்கத்தாவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது
இந்தக் கடத்தல் மிரட்டல் செய்தியை எழுதியது யார் மற்றும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைப் கண்டறிய காவல்துறையும் பாதுகாப்பு முகமைகளும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன. விமான நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் விமானத்தின் உட்புறக் காட்சிகளை அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.