சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான 'Belonging: A Journey of Love' டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
டெல்லி ஐடிசி ஓட்டலில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், சோனியா காந்திக்கு அவரது பிள்ளைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை விவரிக்கும் சிறப்பு காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
குறிப்பாக, இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் முன்வரிசையில் ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் வரிசையில் காங்கிரஸ் முதலமைச்சர்களான டி.கே.சிவக்குமார் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோர் அமர்ந்திருந்தது கவனம் ஈர்த்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சோனியா காந்தி, தனது கணவர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதைத் தான் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவித்தார். மாமியார் இந்திரா காந்தி தனது வாழ்நாளை அரசியலுக்கே அர்ப்பணித்ததைப் பார்த்ததால், ராஜீவும் அரசியலுக்கு வந்தால் அவரை இழக்க நேரிடும் என அஞ்சியதாகக் குறிப்பிட்டார். ராஜீவ் அரசியலில் நுழைந்த பிறகு குடும்ப வாழ்க்கை மாறினாலும், கிடைத்த குறைந்த நேரத்தையும் மதிப்புமிக்கதாக மாற்றி அன்பை வலுப்படுத்திக் கொண்டதாக அவர் நெகிழ்ந்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கண்டு ஆரம்பத்தில் தான் மிகவும் பயந்ததாகவும், அவரை 'மா' என்று அழைக்க முடியாமல் தயங்கியதாகவும் சோனியா பகிர்ந்து கொண்டார். ஆனால், ராகுல் மற்றும் பிரியங்கா பிறந்த பிறகு இந்திரா காந்தி மிகவும் மென்மையானவராக மாறிவிட்டதாக அவர் கூறினார். தன்னைப் பற்றிப் பரவும் உண்மையற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தப் புத்தகத்தை எழுதியதாகத் தெரிவித்த சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தான் ஒரு குழந்தையாகவும், ராகுலும் பிரியங்காவும் தனக்குப் பெற்றோராகவும் மாறிவிட்டனர் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.