இந்தியா

குடும்பத்துடன் சிக்கிய பினராயி விஜயன்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

By Christon
12 Oct 2026, 10:25 AM
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாகக் கேரள முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அம்மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (VACB) இரண்டு முதன்மைத் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்துள்ளது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) நிறுவனம் தொடர்பான லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை (ED) சேகரித்த ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மாநிலக் காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் புதிய உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சட்ட ஆலோசனைகளைப் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு-1, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கையின்படி, பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வந்த (தற்போது மூடப்பட்ட) 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்திற்கு ஐடி ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் CMRL நிறுவனம் ரூ. 2.78 கோடி போலி பணப்பரிமாற்றம் செய்ததாக முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பினராயி விஜயன் முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது வழக்கு, பினராயி விஜயனின் மருமகனும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஏ. முகமது ரியாஸ் தொடர்புடைய பணத்தை வெளிநாடுகளுக்கு ஹவாலா வழியில் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பானது. இந்த வழக்கில் முகமது ரியாஸ் முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மகள் வீணாவுக்கு வழங்கப்பட்ட தொகைகள் மற்றும் முகமது ரியாஸ் தொடர்புடைய வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டு புகார்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியாகப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் கேரளா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.