டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டது குறித்தும், காவல்துறையின் நடவடிக்கை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்த தடுப்பு நடவடிக்கையாக 7,000-க்கும் மேற்பட்டோர் காவலில் எடுக்கப்பட்டதாகவும், பலர் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீத்தன் வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் போராட்டம் தொடர்பான கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றன. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும் உள்ள உரிமையைக் காவல் துறையினர் முழுமையாக மதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியமானதாகவும், நியாயமான அளவிலும் இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், "அமைதியான முறையில் போராடுபவர்களிடம் காவல் துறையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான குடிநீர் மறுக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் அவர்களை வெகு தொலைவில் கொண்டு சென்று இறக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
CJP அமைப்பானது வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாகும். இருப்பினும், தேர்தல் ஆணையமும் பா.ஜ.கவும் இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளன.
அதேவேளையில், பா.ஜ.க தலைவர் நிதின் நபீன் இந்த போராட்டத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். எதிர்க்கட்சிகள் வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.