அசாம் மாநிலம் குவாஹாட்டி அருகே கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் போட முயன்றும் அது வேலை செய்யாததால் இந்த விபத்து நடந்துள்ளது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
கொல்கத்தாவிலிருந்து மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் அருகே உள்ள சாயிராங் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (நவ.11) காலை 6.54 மணியளவில் காம்ரூப் மாவட்டத்தின் திகாரூ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 45 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிவப்பு சிக்னல் போடப்பட்ட நிலையில் ஓட்டுநர் அவசர கால பிரேக்கை (Emergency Brake) செயல்படுத்த முயல்கிறார். ஆனால், பிரேக் பைப் அழுத்தம் குறையாமல் பிரேக் வேலை செய்யவில்லை. ஓட்டுநர் பல வழிகளில் ரயிலைக் கட்டுப்படுத்த முயன்றும் ரயில் நிற்காமல் சென்று தண்டவாளத்தில் தடம் புரண்டு மோதி நின்றது.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்பு ரயில்கள் அனுப்பப்பட்டு, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பொது மேலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். ரயிலில் இருந்த பயணிகள் மாற்று ரயில் மூலம் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரயிலின் சமையல் அறை மேலாளர் கூறுகையில், "ரயில் குவாஹாட்டி வரை சரியாகவே வந்தது. திகாரூ நிலையத்தைக் கடந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது. சிறிது தூரத்திலேயே என்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகியதை உணர்ந்தோம். தண்டவாளத்தை விட்டு விலகிய நிலையிலேயே ரயில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றது. 10 நிமிடங்களுக்குப் பிறகே ரயில் முழுமையாக நின்றது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்" என்று தெரிவித்தார்.