கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்ட பாஜக பிரமுகர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தார்வாட் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்த பாஜகவின் யோகேஷ்கவுடா, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்திலேயே வைத்து ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 15 அன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்தது. இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சிபிஐ வாதம்
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, "இது மிகக் கொடூரமான மற்றும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. வினய் குல்கர்னி மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்திச் சாட்சிகளை விலைக்கு வாங்க முயன்றார். போலி குற்றவாளிகளை உருவாக்கி வழக்கைத் திசைதிருப்பினார். எனவே, இவருக்குக் கடுமையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அரசியல் சதி என மறுப்பு
வினய் குல்கர்னி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "இது அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட பொய் வழக்கு. வினய் குல்கர்னி தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர். அவர் நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், சிபிஐ-யின் ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.