இந்தியா

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

By Christon
15 Jul 2026, 05:44 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகப் பிகானேர் அரசு மருத்துவமனையில் மற்றொரு பெண்ணும் பலியானதைத் தொடர்ந்து, மாநிலம் தழுவிய அவசரக் கண்காணிப்புக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தை உலுக்கும் 19 மரணங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் தாய்மார்கள் மரண வீதம் கடந்த மூன்று மாதங்களில் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களால் மொத்தம் 19 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதில் கோட்டாவில் 5 பேர், பிகானேரில் 3 பேர், ஜோத்பூரில் 2 பேர் மற்றும் பில்வாரா, பன்ஸ்வாரா ஆகிய பகுதிகளில் 9 பேர் என இந்தத் தொடர் மரணங்கள் பதிவாகி ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளன.

பிகானேரில் நிகழ்ந்த 3-வது பலி

இந்த 19 மரணங்களின் தொடர்ச்சியாக, பிகானேரில் உள்ள பி.பி.எம் (PBM) அரசு மருத்துவமனையில் கமலா மேக்வால் (25) என்ற பெண் பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 15) உயிரிழந்தார். சர்க்கரை நோயாளியான இவருக்குச் சிசேரியன் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிறுநீரகச் செயல்பாடு முடங்கியது.

ஒரு மாத காலத் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் மல்டிபிள் ஆர்கன் ஃபெயிலியர் காரணமாகப் பலியானார். இந்த மருத்துவமனையில் மட்டும் கடந்த சில வாரங்களில் பிரீத்தி (20), சாரதா (26), கமலா என 3 தாய்மார்கள் ஒரே மாதிரியான சிறுநீரகச் செயலிழப்பு பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் அதிரடி உத்தரவு

மூன்று மாதங்களில் 19 தாய்மார்கள் உயிரிழந்த விவகாரம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பின் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் ராஜஸ்தான் அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு முறையான பிரசவக்காலப் பரிசோதனைகள் மற்றும் தொடர் ஆரோக்கியக் குறியீடுகளைக் கண்காணிக்க ஏதுவாக 5 நாட்கள் சிறப்பு மாநில தழுவிய மருத்துவ முகாம்களை நடத்த மருத்துவத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.