முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் பலகாரங்கள் ஒரே மாதிரியாக சிவந்து, மொறுமொறுப்பாக இருக்கும்.
முறுக்குமாவு பிசையும்போதுதண்ணீரை நேரடியாக ஊற்றாமல், வெண்ணெய், தேங்காய்ப் பால், பெருங்காயம் ஊறிய தண்ணீர் ஆகியவற்றைச் சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசைந்து வைக்கவும். பிறகு ஈரத்துணியால் மூடி, தேவையான அளவு மாவை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு செய்தால், சுவையும் பதமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஓட்ஸ் லட்டு, சிறுதானிய ரவை லட்டு போன்றவற்றைப் பிடிக்கும்போது, இனிப்புக்கு சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இனிப்பு சோமாஸ் செய்யும்போது, பூரணத்தில் வறுத்த கசகசா, பொட்டுக் கடலை, வறுத்த கொப்பரைத் தேங்காய் துருவல், இனிப்பில்லாத கோவா, பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரித்தால் சோமாஸ் சுவையாக இருக்கும். சோமாஸ் தயாரித்ததும் சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் தோய்த்து எடுத்து வைத்தால், ஆறியதும் சர்க்கரை பூத்து பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும்.
கேரட் அல்வா செய்யும்போது, பாலில் வேகவைத்த கேரட்டை நன்றாக மசித்து, அதனுடன் பால்கோவா, கன்டென்ஸ்டு மில்க், விருப்பமான எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். அல்வா நன்றாகச் சுருண்டு, பளபளப்பாக வந்ததும் இறக்கினால் சுவை சூப்பராக இருக்கும்.
ஜாங்கிரி செய்யும்போது தரமான உளுந்து பயன்படுத்த வேண்டும். மாவுப் பதம் நீர்த்தன்மையுடன் இல்லாமல் கெட்டியாக பஞ்சு போல இருக்க வேண்டும். பாகு எடுக்கும்போது அரை நூல் பதம் போதும். குலாப் ஜாமூனுக்கு இருப்பதை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
பால்கோவா செய்யும்போது, மெலிதான துணியில் 2 டீஸ்பூன் கோதுமை மாவைப் போட்டு இறுகக் கட்டி, கொதிக்கும் பாலில் சிறிது நேரம் வைத்த பின்னர் எடுத்துவிடவும். இதனால் பால்கோவா க்ரீம் நிறத்தில் கிடைக்கும்.
தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயைத் துருவி வாசனைபோகும் வரை வாணலியில் வறுத்துப் பிறகு சர்க்கரை சேர்த்தால் பச்சை வாசனை நீங்கி, பர்பிக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
அதிரசம் செய்யும்போது, பாகு பதத்தைச் சரியாகப் பார்த்து மாவில் சேர்க்க வேண்டும். பாகு மிகவும் கெட்டியாகிவிட்டால் அதிரசம் கடினமாகிவிடும்; பதம் குறைவாக இருந்தால் எண்ணெயில் போடும்போது அதிகமாகப் பரவிவிடும். எனவே பாகு சரியான பதத்தில் இருக்கும்போது மாவில் சேர்ப்பது முக்கியம்.
ரவா லட்டு செய்யும்போது, ரவையை நன்றாக வறுத்து, ஆறிய பிறகு பொடித்துச் சேர்க்கவும். அதனுடன் சிறிது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் லட்டுவுக்கு நல்ல மணமும் சுவை யும் கிடைக்கும்.
பூந்தி லட்டு செய்யும்போது, பூந்தியை எண்ணெயில் அதிக நேரம் விடாமல் பொன்னிறமாகும் முன்பே எடுத்து சர்க்கரைப் பாகில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் லட்டு மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.