குதிரை பேர அரசியல் உலகில்
குதிரைகளை தேடுங்கள்!
பாலகுமாரனின் குதிரைக்கவிதைகள்!
யானை, கடல் இவையெல்லாம் எப்போதும் பார்த்தாலும் வியப்புதான். அதிசயம்தான். ஆச்சரியம்தான். இந்த வரிசையில் குதிரையையும் சேர்த்துக்கொள்ளலாம். தம்மாத்தூண்டு முயலை வேகத்துக்குச் சொன்னாலும் குதிரையின் பேரம்தான்... மன்னிக்கணும்... குதிரையின் வேகம்தான் ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதனால் மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்களுக்கு ஓட்டத்தை ‘ஹார்ஸ் பவர்’ என்கிறோம்.
யானைகள் போல் கோயிலில் குதிரைகள் இருப்பதில்லை. இப்போது கோயில்களில் யானையைப் பார்ப்பதே அரிதாகிவிட்டன. குதிரையை பீச், ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான இடங்களில் பார்க்கலாம். ஆனால் நாமும் நம் குழந்தைகளும் செல்போனில், ‘பப்ஜி’ விளையாடிக்கொண்டிருக்கிறோம். ‘குதிரைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாத வகையில் நம் குழந்தைகள் வளருகிறார்கள்’ என்று கூட்டத்தில் ஒருமுறை பேசினேன். முடித்துவிட்டு இறங்கியதும், ‘குதிரைப் படம் நம்மவீட்ல ஒட்டியிருக்கு. கழுதை எப்படி இருக்கும்னு காட்டு’னு என் பேத்தி அடம்பிடிக்கிறா. கழுதைக்கு நான் எங்கே போறது?’ என்று அலுப்பும்சலிப்புமாகப் பெரியவர் சொன்னார்.
’பொன்னியின் செல்வன்’ படிக்கும்போதெல்லாம் குதிரையில் நாமே ‘நுக்நுக்நுக்’ என பயணிப்பது போல கற்பனைக்குதிரை ஓடும். எம்ஜிஆரும் சி எல் ஆனந்தனும் கெளபாய் நாயகன் ஜெய்சங்கரும் குதிரையில் பறப்பார்கள். நமக்கு ஜிவ்வென்றிருக்கும். குதிரை, டபுள் ஆக்ட் எம்ஜிஆர் மாதிரி. ஒருவர் சாது, இன்னொருவர் பாய்ச்சல் ஆசாமி என்பது போலத்தான் குதிரை! பார்க்க ‘அப்புராணி’யாக இருக்கும். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனாகிவிடும்.
என் குருநாதர் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் எழுதிய நாவல்களில், ‘இரும்புகுதிரைகள்’ நாவலும் ஒன்று! லாரிதான் இரும்புகுதிரை. இதில் குதிரையைக் கொண்டு நமக்கு வாழ்க்கைப் பாடமே நடத்தியிருப்பார் பாலகுமாரன்.
‘குதிரைகள் கடவுள் ஜாதி - அதைக்
கும்பிடுதல் உலக நீதி’ என்று ஆரம்பிக்கும் அந்த குதிரைகள் சொல்லும் ஒவ்வொரு பாடமும் மனப்பாடம்.
குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்துபோகும்- இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்!
என்று ‘இரும்பு குதிரைகள்’ நாவலில் குதிரையின் குணங்களையும் நம் ஆழ்மன கசடுகளையும் சொல்லியிருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.
குளம்படி ஓசைக்கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு - இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்!
இப்படி நாவலில் பல இடங்களிலும் பாலகுமாரன் குதிரைக் கவிதை மூலமாகவே, ஆண் பெண் நட்பையும் காதலையும் காமத்தையும் மிகத்தெளிவுற சொல்லிக்கொடுத்தார். இன்றைக்கு இருக்கிற ஆண் பெண் நட்புக்கு சகஜமாக்கி, அஸ்திவாரமிட்ட எழுத்தாளர் பாலகுமாரன் என்றும் அவரின் பல கதைகள், எழுத்துகள் அவற்றை ஒவ்வொருவிதமாகப் புகட்டி, நன்னம்பிக்கையை ஊட்டியது என்றும் சக எழுத்தாளர்களே சொல்லுவார்கள். மாலன், வைரமுத்து, கமல்ஹாசன் முதலானவர்கள் பாலகுமாரனை வியக்கின்ற இடம் இங்கேதான்!
மரத்தடியில் அமருவது போல, கடல் மணலில் உட்காருவது போல, கோயில் தூண்களை தடவிப் பார்த்துக்கொண்டிருப்பது போல, குதிரையக் காணக்கிடைக்கிற வாய்ப்பு கிடைத்தால் நமக்கு ‘நல்ல நேரம்’தான்! அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்து, ஒரு அரைமணி நேரம் குதிரையைப் பார்த்தால், குதிரையின் சாந்தமே தியானமாகும்; அமைதியே நிதானம் கொடுக்கும். அதன் பார்வையே நம்மை கூர்மைப்படுத்தும். குதிரை பார்ப்பவர்களும் உணருபவர்களும் கூட பாக்கியசாலிகள்தான்!
‘நண்பர் பாலகுமாரன் எழுத்து, வாள் மாதிரி. ரொம்பவே கூர்மையாக இருக்கும். அவர் டிராக்டரை காதலியாகப் பார்ப்பார். குதிரையை மனிதர்களாகப் பார்ப்பார். கரையோரத்தில் இருக்கிற முதலைகளையும் பழிவாங்குகிற நம் அசிங்க குணத்தையும் கோர்த்து கேள்வியாக்கி பொளேரென அறைவார். பாலகுமாரனின் எழுத்துகள்தான் எங்களுக்குள் நட்பை உண்டுபண்ணியது’ என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதும் இங்கே நினைவுக்கு வருகிறது.
முடிந்தால் உங்களுக்குள் இருக்கிற குதிரையைத் தேடுங்கள். அல்லது ‘இரும்பு குதிரைகள்’ படியுங்கள். இரண்டும் ஒன்றுதான்!
- வி.ராம்ஜி