நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
திரிஷா முதலில் தனது பாட்டியின் 98-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு மறைமுக பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த வயதில் நாடகம் செய்வது சங்கடமாக இருக்கிறது… போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என்ற கருத்துடன் ஒரு பதிவு இடம்பெற்றிருந்தது.
அடுத்ததாக, கண் திருஷ்டி குறியீட்டுடன்,
“ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிக்கொண்ட வாழ்க்கையால் இன்று மனநிறைவுடன் திணறுவது எவ்வளவு பெரிய வரம்” என்ற கருத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளிலும் திரிஷா உதயநிதி ஸ்டாலின் பெயரையோ, தற்போதைய சர்ச்சையையோ நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், சர்ச்சை பரபரப்பாக இருக்கும் நேரத்தில் இந்த பதிவுகள் வெளியாகியுள்ளதால், அவை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
திரிஷாவின் அம்மாவும் மறைமுக பதிவு
திரிஷாவின் பதிவுகளைத் தொடர்ந்து, அவரது தாயாரும் சமூக வலைதளத்தில் மறைமுக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
“கடைசி ஒன்று, சிறந்த ஒன்று” என்ற தலைப்புடன் இடம்பெற்ற அந்த பதிவில், உடற்பயிற்சி செய்வது, சருமப் பராமரிப்பு, தண்ணீர் குடிப்பது, பணம் சம்பாதிப்பது, மற்றவர்களிடம் அன்பாக இருப்பது மற்றும் “உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” உள்ளிட்ட பல்வேறு நினைவூட்டல்கள் இடம்பெற்றிருந்தன.
அவரது பதிவிலும் தற்போதைய சர்ச்சை அல்லது எந்த தனிநபரின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
உதயநிதி – திரிஷா சர்ச்சை எப்படி தொடங்கியது?
காவிரி நீர் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திரிஷாவின் பெயரை முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உதயநிதி திரிஷாவை குறிப்பிட்டு இரட்டை அர்த்தம் கொண்ட கருத்தை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் போலீசார் உதயநிதி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் 90 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றதாகவும், அதன் பின்னர் காவல் நிலைய பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது அரசியல் மோதலாகவும் மாறியுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரிஷா மற்றும் அவரது தாயார் வெளியிட்டுள்ள இந்த மறைமுக பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.