சினிமா

விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல்!

By Christon
09 Mar 2026, 10:37 AM
'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், படத்தில் உள்ள சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த விவகாரம் தனிநீதிபதி முதல் தலைமை நீதிபதி அமர்வு வரை பல்வேறு சட்டப் போராட்டங்களைக் கடந்து வந்துள்ளது.

சட்டப் போராட்டமும் நீதிமன்ற உத்தரவும்

முதலில் தனிநீதிபதி பி.டி. ஆஷா படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், தணிக்கை வாரியத்திற்கு உரிய அவகாசம் வழங்கி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, படத்தை மறுதணிக்கைக்கு (Revising Committee) அனுப்ப முடிவு செய்தனர்.

தள்ளிப்போன மறுஆய்வு

மறுதணிக்கை குழுவினர் இன்று மாலை 2.30 மணியளவில் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்துச் சான்றிதழ் குறித்து முடிவெடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தணிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த திரையிடல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தணிக்கைச் சான்று பெறுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் கவலை

தொடர் சட்டச் சிக்கல்கள் மற்றும் தணிக்கை வாரியத்தின் தாமதத்தால் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தெளிவான முடிவு எடுக்க முடியாமல் படக்குழு தவித்து வருகிறது. பொங்கல் ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்கள், தற்போது ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத தாமதத்தால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் தணிக்கை பணிகள் முடிந்து படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் திரையுலகினர் காத்திருக்கின்றனர்.