சினிமா

ஓம் இசை வெளியீட்டு விழா... அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? 234 தொகுதிகள் குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

By Bhavani
07 Nov 2026, 08:30 AM
'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்; என் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள்” எனத் தன்னைச் சுற்றியுள்ள அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, தன்னை யாரோ இயக்குவதாகப் பரப்பப்படும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், “என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்” என்று தனுஷ் பேசியுள்ளார்.

'அமரன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ஓம்'. வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

'எனக்கு Fans... Fans தான் துடிக்கும்!'

இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “என்ன பேசலாம்? நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்று பேசத்தான் போகிறார்கள். பேசலாம். ஒரு தம்பி சொன்ன மாதிரிதான்... எல்லோருக்கும் ஹார்ட் லப்டப் லப்டப்னு துடிக்கும். ஆனால் எனக்கு Fans... Fans என்றுதான் துடிக்கும்.

'மாரி 2' படம் பண்ணும்போது சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டாக இருந்தாங்க. ஆனால் இப்போது முழுவதுமாக மாறி, சந்திரமுகி மாதிரி சினிமாவைக் கரைத்துக் குடித்த மாதிரி இருக்காங்க. ரொம்ப சூப்பராகப் பேசுகிறாங்க. ரொம்ப அழகாக இருக்காங்க.

மம்முட்டி சார் என்றால் 'தக்லைஃப்', 'தக்லைஃப்' என்றால் அது மம்முட்டி சார்தான். அவர் ரொம்ப ஸ்வீட்டான மனிதர். அவர் நடித்த 'அழகன்' திரைப்படத்தைப் பார்த்து ரசித்தவன் நான். இப்போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பது ரொம்ப சந்தோஷம்” என்றார்.

'என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான்!'

தொடர்ந்து தன்னைச் சுற்றி நிலவும் அரசியல் பேச்சுகள் குறித்துப் பேசிய தனுஷ், “என்னை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார், இவர் பின்னால் ஒருவர் இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் யாரும் இல்லை. என் பின்னால் இறைவன் இருக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை” என்று தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள்!

மேலும், இளைஞர்களின் கல்வி குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்க உள்ளோம். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் டியூஷன் சென்டர்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்.

எல்லோருக்கும் கண்டிப்பாகத் தெரிய வேண்டிய ஒன்று, அறிய வேண்டிய ஒன்று அரசியல்!” என்றார்.

ஏற்கெனவே அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'ஓம்' திரைப்படம், பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய கருத்துகள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.