All India Doctors Association Protest Against Kolkata Doctor Rape Murder Case : கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆர்.ஜி. கர் மருத்துவமனை முன்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில், மர்ம கும்பல் உள்ளே நுழைந்தது தாக்குதலில் ஈடுபட்டச் சம்பவமும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. லாரியில் வந்த சுமார் 35 இளைஞர்கள் மருத்துவமனையின் அவசர சிகிக்சை பகுதியை அடித்து நொறுக்கினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், அடையாளம் தெரியாத மர்ம கும்பல் மீதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அதேநேரம் போராட்ட களத்தில் நுழைந்த கும்பலைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால், கொலை சம்பவம் நடந்த பகுதியில் தடயங்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக, RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களிடம், சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த மருத்துவமனையை சேர்ந்த 5 மருத்துவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (ஆக.17) காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மருத்துவ பணிகள் செய்ய போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவ சேவை வழங்கப்படும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக போராட்டம் நடைபெற்று வரும் 5 நாட்களாக சிறுவன், கர்ப்பிணிப் பெண் உள்பட 3பேர் மருத்துவர்கள் பணி செய்யாததால் இறந்துள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதனால், தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள் எனவும், அதற்காக உங்கள் கால்களில் கூட விழ நான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சிபிஐக்கு அனைத்து ஆதரவையும் வழங்கி வருவதாகவும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - விண்ணில் பாய ரெடியான SSLV D3 ராக்கெட்
இதனிடையே, மேற்குவங்கம், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் நடைபெறும் போராட்டத்தில் பெங்காலி திரைப்படத்துறை, சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.