2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்... தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Oct 25, 2024 - 17:11
 0

தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய், மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனதிற்கும் கள வளாகத்திற்கும் வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். 

நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என எழுதியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow