ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!
சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குற்றத்துக்கு தண்டனையாகவும், இனிமேல் குற்றம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தை ஏற்படுத்தவுமே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த சிறைக்குள்ளேயே, திருடுவதற்காக பயிற்சி எடுத்து வந்து, அதை செயல்படுத்தியதால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைப்பறவையாகி இருக்கிறார் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த முத்து மாரியப்பன் என்னும் இந்த நபர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல்நிலையம் எதிரே உள்ள வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவர், தனது வீட்டு முன்பு இரவில் நிறுத்தி வைத்த இருசக்கரவாகனம் திருட்டு போனது தொடர்பாக, புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்நிலையம் அருகிலேயே திருட்டுச் சம்பவமா என்று வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் பைக்கைத் திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த பகுதிகளில் இருந்த, சிசிடிவிக்களை ஆய்வு செய்தபோது, அங்குள்ள பெட்ரோல் பங்கில், பைக்குக்கு பெட்ரோல் போட்டுசென்றதும் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து ஆய்வு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடி, திருட்டில் ஈடுபட்ட மேலக்கடையநல்லூரில் வசித்துவரும், முத்துமாரியப்பனைப் பிடித்து விசாரித்ததில், சுவாரஸ்யமான தகவல்கள் வெளியானது.
நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த முத்துமாரியப்பன், தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியின் ஊரிலேயே வசித்தபடி, பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது, கடையநல்லூர் பகுதியில் உள்ள கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய வழக்கு ஒன்றில் முத்துமாரியப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது சிறையில் இருந்த சக குற்றவாளிகளுடன் நெருக்கம் ஏற்பட, தனது திருட்டுத் தொழிலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போக அவர்களிடமே ஐடியா கேட்டுள்ளார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடலாம் என்று தெரிவித்த சிறைக்கூட்டாளிகள், மோட்டார் சைக்கிளின் லாக்கை உடைத்து திருடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்துள்ளனர்.
இதன்பின்னர், தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வந்தவர், மனைவியின் ஊரில் இருந்தபடி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில்தான் சம்பவத்தன்று இரவு, வேலை முடிந்து புளியங்குடி திரும்பியவர் டாஸ்மாக்கில் மது அருந்தியருக்கு, சிறை நண்பர்கள் கத்துக் கொடுத்தது எல்லாம் ரீவைண்ட் ஆக, அந்த வேகத்தில், வழக்கறிஞரின் இருசக்கரவாகனத்தை திருடிச் சென்றதாகக் கூறியதாக விசாரித்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முத்துமாரியப்பனை கைது செய்த போலீசார், சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கூடாய் நட்பு கேடாய் முடியும் என்பது போல, சிறையில் ஏற்பட்ட கெட்ட சகவாசம், இளைஞரை திருட்டில் ஈடுபட வைத்து மீண்டும் சிறைக்கே அனுப்பியுள்ளது.
What's Your Reaction?