Gujarat Girl Student NEET Exam Results Issue : இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே கடந்த மே மாதம் இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் 720க்கு 720 என முழுமையான மதிப்பெண்கள் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதை மத்திய அரசு ஒப்புக்கொண்டு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், இதுவரை 40 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நீட் தேர்வு எழுதிய 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நகரம் வாரியாக, மாவட்டம் வாரியாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. அதன்படி திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அப்போது குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடந்த ஜூன் மாதம் மறு தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால் இதிலும் இயற்பியல் பாடத்தில் வெறும் 22 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த அவர் மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். வேதியியலில் 33 மதிப்பெண்கள் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார். அதே வேளையில் இந்த மாணவி மிகவும் கடினமான நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் பெயிலான மாணவி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றது எப்படி? என்று பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
அதுவும் இந்த மாணவி நீட் தேர்வில் வேதியியல் மற்றும் இயற்பியலில் 99.14% மற்றும் 99.89% மதிப்பெண்கள் பெற்றுள்ளது அனைவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் அந்த மாணவியால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாது. இந்த குஜராத் மாணவி மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவிகளும் இதுபோல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முறைகேடு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நீட் தேர்வை எழுதியவர்கள் கூறி வருகின்றனர்.