காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்... ராஜ்நாத் சிங் இரங்கல்!

கதுவா மாவட்டம் மட்டுமின்றி குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jul 9, 2024 - 09:07
Jul 9, 2024 - 10:52
 0
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்... ராஜ்நாத் சிங் இரங்கல்!
ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 24 மணி நேரமும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று வருகின்றனர். ஆனாலும் எப்படியாவது இந்தியாவுக்குள் ஊடுருவி விடும் சில பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் பட்னோடா பகுதியில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் ராணுவ வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள். நமது வீரர்கள் மீது துப்பாக்கியிலும் சுட்டனர்.

இந்த தாக்குதலில்  5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உடனடியாக அங்கு இருந்து தப்பிச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கதுவா மாவட்டம் மட்டுமின்றி குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''ஜம்மு-காஷ்மீரின் பட்னோடா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளது வேதனை அளிக்கிறது. 

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் துணை நிற்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், அங்கு அமைதியை நிலை நாட்டுவதில் உறுதியாக உள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow