"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" தவெக தலைவர் விஜய்க்கு உறவினர்கள் சரமாரி கேள்வி!
"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலைகோவன், இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் ஆகியோர் காரில் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களுடைய கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகிகளின் இறப்புக்கு கட்சியின் தலைவர் விஜய், இரங்கல் தெரிவிக்காததற்கு உறவினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திருச்சி அடுத்த உறையூரில் கலைகோவன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாகிகளின் மறைவு பெரும் இழப்பு என்றும், தவெக தலைவர் விஜய் சொன்னதாலேயே ஆறுதல் தெரிவிக்க வந்ததாகவும் கூறினார்.
What's Your Reaction?