போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வாடிகன் தகவல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் அனைவராலும் மதிக்கப்பட்டு வருகிறார். 88 வயதான இவர் கடந்த 14-ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.மேலும் அவருக்கு ரத்த உறைதலுக்கு தேவையான ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் கழித்ததாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் பிரான்சிஸின் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போப் உடல் நலம் குறித்து வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “போப் பிரான்சிஸ்க்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. ரத்தப் பரிசோதனைகளில் அவருக்கு லேசான ஆரம்பகட்ட சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அது கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புடன் அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா என்பது நுரையீரல்களின் காற்றுப்பைகளில் அழற்சி ஏற்படுத்தும் ஒரு தொற்று. இந்த பைகளில் திரவம் நிரம்பி, சளியுடன் இருமல், காய்ச்சல், நடுக்கம், உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். நிமோனியாவை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள், இருமல், தும்மலில் வெளியேறும் நீர்த்துளிகள் மூலமோ, கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொட்டுவிட்டு வாய், மூக்கு அல்லது கண்களை தொடும் போதும் பரவக்கூடும்.
நிமோனியா யாருக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு?
நிமோனியா யாருக்கு வேண்டுமானாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் போப் போன்ற அதிகம் வயதானவர்களுக்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2 வயதுக்குட்பட்டவர்களுக்கும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?






