Chennai Air Show : விமானத்தால் பறந்த மானம்... தலைகுனிந்த திராவிட மாடல்!

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

Oct 8, 2024 - 11:54
 0

இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பே முடிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விமானப்படை துணை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் பிரேம் குமார் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறி இருந்தார்.

சென்னையில் அதுவும் மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்ப்பார்புகள் அதிகரிக்கத் தொடங்கியது என்றே கூற வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியை காண அனுமதி இலவசம் என்ற அறிவிப்பும், நிகழ்ச்சி நடைபெறும் நாளான அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முன் 3 நாட்களாக சென்னையை வட்டமடித்த ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகளின் ஒத்திகைகள் என அனைவரின் ஆவலையும் அதிகப்படுத்தியது. 

எனவே அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை முதலே மெரினாவில் மெல்ல மெல்ல கூட்டம் கூட தொடங்கியது. நேரம் ஆக ஆக விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண மக்கள் சாரைசாரையாக படையெடுக்க தொடங்கினர். காலாண்டு விடுமுறையின் கடைசி நாளை ஏர் ஷோ பார்த்து உற்சாகமாக முடிக்கலாம் என்று நிணைத்து பொதுமக்கள் தங்களின் குழந்தைகளோடு மெரினா நோக்கி வரத்தொடங்கினர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி.

சுமார் 11 மணி அளவில் சென்னை கடற்கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். சரியாக 11 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி தொடங்க சிறப்பு விருந்தினர்களாக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோருக்கும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஏசி வசதியுடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அவர்களும் ஆர்வத்துடன் விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏர் ஷோ தொடங்கி எல்லாம் நன்றாகத்தான் போனது. அடுத்தது ராணுவ விமானங்கள் வானத்தை வட்டமடிக்க கடல் அலைக்கு நிகராக கூடி இருந்த மக்களை அலை ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. 

சரியாக 1 மணிக்கு ராணுவ விமானங்கள் வட்டமடிக்க கூடியிருந்த மக்கள் கூட்டம் வளைத்து வளைத்து வீடியோ எடுத்துவிட்டு கிளம்ப தயாரானது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் வெளியேற முயன்ற போதுதான் தமிழக அரசின் நிர்வாகத் திறன் குறைவும், போதிய திட்டமிடல் இல்லை என்பது கண்கூடாக பார்க்க முடிந்தது. கடற்கரையை ஒட்டிய பறக்கும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, வேளச்சேரி ரயில் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர்.  நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போக, கடற்கரையில் சுட்டெரித்த வெயில், வீசிய உப்புக்காற்று லட்சக்கணக்காணவர்களின் நாவை வறண்டுபோக செய்தது. தண்ணீர் தேடி அலைந்த மக்கள் ஒரு கட்டத்தில், 100 பேர் செல்ல வேண்டிய சாலையில் ஆயிரம் பேர் நெருக்கியடித்து செல்ல ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் மயங்கி சரிந்துள்ளனர்.  இந்த நெரிசலில் சிக்கியும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்ததாகவும், 90 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் சோகத்தின் உச்சம். 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று தெரிந்தும் போதிய குடிநீர் வசதியோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ அரசு செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் குற்றம்சாட்டி இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. கூட்டத்தில் யாரும் மரணமடையவில்லையென்றும் எந்த ஒரு மரணமும் நெரிசலாலோ, மோசமான ஏற்பாடுகளாலோ நடக்கவில்லையென்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு இவ்வாறாக பதிலளித்திருந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு அரசியல் அரங்கில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது, விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததே அதற்குக் காரணம். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த முறை இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது, கூடுதல் கவனமும், ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இம்முறையே கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் 5 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்பதே பொதுமக்களின் வேதனை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow