பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்.. கேடயமாக்கப்பட்ட பயணிகள்.. முழு விவரம்!
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு மார்ச் 12-ஆம் தேதி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடம் சென்று கொண்டிருந்த இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
இதையடுத்து, பலுச் அமைப்பினர் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைப்பிடித்தனர். அப்போது, ரயிலின் ஒரு சில பெட்டிகளில் பயணம் செய்த பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் பலுச் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 30 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிணைக் கைதிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த மீட்கும் பணியின் போது 33 பலுச் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், 24 மணிநேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணியில் பலுச் அமைப்பினர் வசம் இருந்த 21 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இரங்கல்:
"பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுச் அமைப்பினர் சிறைப்பிடித்த சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான கோழைத்தனமான செயல் பாகிஸ்தான் நாட்டின் அமைதிக்கான உறுதியை அசைக்காது” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மீட்பு பணி விவரம்:
இந்த மீட்பு பணியில் இராணுவ வீரர்கள், விமான படை உள்ளிட்ட பலர் ஈடுபடுத்தப்பட்டனர். பலுச் அமைப்பினர் பயணிகளை கேடயமாக பயன்படுத்தியதால் மீட்பு பணி மிகவும் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் நடைபெற்றதாக இராணுவ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன?
பலுச் அமைப்பினர் ‘ரயில் தாக்குதல் விளையாட்டின் விதியை மாற்றிவிட்டதாக’ இராணுவ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பாகிஸ்தானியர்களை குறிவைப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, முதல் முறையாக பலுச் அமைப்பினர் ரயிலை சிறைப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் அவர்கள் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர், வெளிநாட்டினர் உள்ளிட்டோர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பலுச் அமைப்பினர் ராக்கெட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள ரயில் பாதைகளை குறிவைத்து வருகின்றனர். பெரும்பாலான தாக்குதலுக்கு பலுச் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?






