அரசு பள்ளியில் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.. ஆசிரியர்கள் இல்லாததால் அதிர்ச்சி

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே அரசுப் பள்ளிக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனி நபராக ஆய்வு மேற்கொண்டார்.

Sep 12, 2024 - 11:25
Sep 12, 2024 - 11:26
 0

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலை 8 மணிக்கு பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார். ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காலை உணவு பணியாளர் மட்டுமே, அப்போது பள்ளியில் இருந்தனர்.

இதனால், அவர் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். காலை உணவுத் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிடுகின்றார்கள்? பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் அப்போது வந்திருந்த ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாணவர்களிடம் கற்றல் குறித்து ஆய்வு செய்வதற்காக திருக்குறள், தமிழ்-ஆங்கில எழுத்துகளை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார். காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டபோது, மாணவர்கள் சரியாக உணவை உட்கொள்கின்றார்களா? உணவு வீணாகிறதா என்பதை ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளியில் இருந்து கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow