இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Nov 16, 2024 - 03:57
Nov 16, 2024 - 04:00
 0
இரண்டு கட்சிக்கும் அக்கறை இல்லை; எங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி
இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2022ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 100 பேருக்கு மேல் முன் ஜாமின் பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து கூட்ட பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

அப்போது, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல்  எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.

இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார் 

மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல்துறையினர் தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல்துறையினரை குற்றம் சாட்டுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow