காமாட்சி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா.. திரளான பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சுமி -சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்ககொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோவில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் உற்சவர் காமாட்சி ராஜவீதிகளில் வீதியுலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் மங்கல மேள வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் வீதியுலா வரவுள்ளார். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களாக மார்ச் 9 -ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டமும், மார்ச் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளித்தேர் உற்சவமும் நடைபெறுகிறது.
மார்ச்.12 -ஆம் தேதி மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவமும், மார்ச்.14 -ஆம் தேதி விஸ்வரூப காட்சியுடனும் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






