ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.14) காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (டிச.14) சுமார் 10.12 மணியளவில் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சபாநாயகர் அப்பாவு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், த.வெ.க. தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவருமான, மதிப்பிற்குரிய திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் மத்திய அமைச்சராகவும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார். இந்த துயரமான சமயத்தில் அவரைப் பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார்.
திருநாவுக்கரசர் இரங்கல்
"ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓய்வறியாமல் காங்கிரஸ் கட்சி நலனுக்காக செயல்பட்டவர், கட்சியின் கம்பீரமான குரலாக ஒலித்தவர், அனைவரிடமும் அன்பாகவும், எளிமையாகவும் பழகக் கூடியவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்"
ப.சிதம்பரம் இரங்கல்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஈவிகேஎஸ் இளங்கோவன் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகத் துயரம் அடைந்தேன். இளங்கோவன் அவர்கள் கட்சித் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரபரப்பாகக் கட்சிப் பணியாற்றியவர். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்த காலங்களில் உறுதியாக நின்றவர். அவர் நல்ல பேச்சாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மறைவு காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு. அவருடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் மனப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். . ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருமாவளவன் இரங்கல்
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தராஜன் இரங்கல்
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கே. எஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தி குறிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர்.
பாஜக நிர்வாகி குஷ்பு இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். நான் காங்கிரசில் இருந்தபோது அவரது வழிகாட்டுதலிலும், தலைமையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. த்திசாலித்தனமும் தைரியமும் கொண்ட மனிதர். உள்ளடக்கத்தில் நம்பிக்கை கொண்ட பெரிய இதயம் கொண்ட முழுமையான அகங்காரமற்ற தலைவரின் அரிய இனம். அவர் அனைவராலும் தவறவிடப்படுவார். நிம்மதியாக இருங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?