முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84) இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், முரசொலி செல்வத்தின் உடலை பார்த்ததும் கதறி அழுதார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகை சேர்ந்த ராதிகா மற்றும் சரத்குமார், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.