சினிமா

"கனத்த இதயத்துடன்.." தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கிய அஜித்!

By Christon
04 Jun 2026, 05:40 PM
தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கியுள்ளார் அஜித் குமார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியைத் தொடங்கியுள்ள அவர், சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் சமீபத்தில் காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய் மற்றும் திரை உலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தனது தாயாரின் மறைவு குறித்துப் பேசியிருந்த அஜித், "அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர்; எல்லையற்ற அன்பு மற்றும் அமைதியான மனவலிமையின் உருவமாகத் திகழ்ந்தவர்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் பேரிழப்பு ஏற்பட்டு 4 நாட்களேயான நிலையில், அஜித்குமார் தற்போது மீண்டும் தனது கார் ரேசிங் பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.

அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் அவர் ரேசிங் போட்டிக்குத் தயாராகும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த வாரம் பிரான்சில் நடைபெற உள்ள சர்வதேச கார் ரேசிங் போட்டியில் அவரது குழு பங்கேற்க உள்ளது. "கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன்; ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.