தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார முன்னிலை பெற்று வரும் வேளையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யை நடிகை திரிஷா நேரில் சந்தித்துள்ளது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது முதல் தேர்தலைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம், தற்போதைய நிலவரப்படி 104 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அவர் முன்னிலை வகித்து வருகிறார். இதற்கிடையே நடிகை திரிஷா இன்று விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று நடிகை திரிஷாவின் பிறந்தநாளாகும். தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்த திரிஷா, அங்கிருந்து நேரடியாக சென்னை திரும்பி விஜய் வீட்டிற்கு வந்துள்ளார். விஜய்யின் அரசியல் வெற்றி மற்றும் தனது பிறந்தநாள் என இரண்டு மகிழ்ச்சியான தருணங்களை முன்னிட்டு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தவெக முன்னிலையில் இருக்கும் சூழலில் திரிஷாவின் இந்த வருகை ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.