சினிமா

கிராமிய சினிமாவின் தந்தை: இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

By Christon
10 Jun 2026, 10:15 AM
இயக்குநர் இமயம் எனப் போற்றப்பட்ட பாரதிராஜா (வயது 84) இன்று (ஜூன் 10) காலை உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10) காலை காலமானார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அதன்பிறகு ஏற்பட்ட மனவேதனை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கிராமிய சினிமாவின் தந்தை

1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தார். அதற்கு முன் பெரும்பாலான திரைப்படங்கள் ஸ்டுடியோக்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை மாற்றி தனது படங்களை கிராமங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட பல கிராமியப் பின்னணி வெற்றிப் படங்களை அவர் உருவாக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கிய இவர், கார்த்திக், நிழல்கள் ரவி, ராதிகா, ரேவதி, ராதா உள்ளிட்ட பல சிறந்த நடிகர், நடிகையரையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

விருதுகளும் சாதனைகளும்

இயக்குநராக முத்திரை பதித்த இவர், 2000-க்கு பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆயுத எழுத்து, பாண்டியநாடு, நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக மலையாளத்தில் வெளியான திரைப்படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்திருந்தார். இவரது கலைச் சேவையைப் பாராட்டி கடந்த 2004-ம் ஆண்டு நாட்டின் நான்காவது உயரிய விருதான ’பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறையும், மாநில விருதை 6 முறையும் வென்றுள்ளார்.