நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணா– பாகம் 1' திரைப்படம், வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நவம்பர் 9) அன்று மட்டும் இந்தியாவில் ரூ.103.47 கோடி நிகர வசூல் செய்து அசத்தியுள்ளது.
வழக்கமாகத் திரைப்படங்கள் வார இறுதி நாட்களில் அதிக வசூலை ஈட்டும் நிலையில், ராமாயணா திரைப்படம் திங்கள்கிழமை அன்று தனது மிகப்பெரிய வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 5) ரூ.62.47 கோடியுடன் தொடங்கிய வசூல், வெள்ளிக்கிழமை ரூ.45.84 கோடியாகக் குறைந்தது. சனிக்கிழமை ரூ.67.80 கோடியாக உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி முன்னிட்டு ரூ.54.21 கோடி ஈட்டியது. ஆனால், திங்கள்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை வசூலை விட 90.87% உயர்ந்து, ஒரே நாளில் ரூ.103.47 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. மேலும், திங்கள்கிழமை மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ராமாயணா' திரைப்படம் வெளியான 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ஈட்டிய மொத்த நிகர வசூல்:
நாள் 1 (வியாழன்): ரூ. 62.47 கோடி
நாள் 2 (வெள்ளி): ரூ. 45.84 கோடி
நாள் 3 (சனி): ரூ. 67.80 கோடி
நாள் 4 (ஞாயிறு): ரூ. 54.21 கோடி
நாள் 5 (திங்கள்): ரூ. 103.47 கோடி
மொத்த வசூல்: ரூ. 333.79 கோடி
திங்கள்கிழமை வசூலான ரூ.103.47 கோடியில் இந்தி பதிப்பு மட்டுமே ரூ.85.20 கோடி ஈட்டி மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
இதர தென்னக மொழிகளில் கன்னடப் பதிப்பு ரூ.6.92 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.5.50 கோடியும் வசூலித்துள்ளன. தமிழ் பதிப்பில் இருந்து ரூ.3.45 கோடியும், மலையாளப் பதிப்பில் இருந்து ரூ.2.40 கோடியும் வசூலாகியுள்ளது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்களின் கூட்டு வசூலை (ரூ.100.05 கோடி) விட திங்கள்கிழமை ஒருநாளின் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.