சினிமா

இன்னொரு நேஷனல் அவார்ட் பார்சல்.. தனுஷின் ’குபேரா’ திரைப்படம் எப்படி இருக்கு?

By MUTHUKRISHNAN
20 Jun 2025, 10:45 AM
தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.
தனுஷ் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது. ஆனால் அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர், ராயன் போன்ற திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு தனுஷுக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள குபேரா படத்தின் மூலம் தனுஷ் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் என ரசிகர் மத்தியில் இப்போதே பேச்சு எழுந்துள்ளது.



முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த திரை ரசிகர்கள் அனைவரும் படத்துக்கு பாஸிட்டிவ் ரிவ்யூ வழங்கியுள்ளனர். அதைவிட சிறப்பு தனுஷின் நடிப்பை அனைவரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



’குபேரா' படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தென்னிந்தியாவின் பிரபல ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் மூத்த நட்சத்திரமான நாகார்ஜுனா அக்கினேனி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்பும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.



படம் பார்த்த ரசிகர்கள் இசையமைப்பாளரின் தேவி ஸ்ரீ பிரசாத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். குபேரா படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.