நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று (அக். 15) உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ முதல் பாகம், ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
படம் வெளியானதைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் AURA ஒருபுறம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், மற்றொரு புறம் நமோ நாராயணா நடித்துள்ள பழக்கடை மூர்த்தி கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் அவர் தோன்றும் காட்சிகள் சிரிப்பை வரவழைப்பதுடன், அவரது வித்தியாசமான நடிப்பும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
மீம்ஸ்களில் கலக்கும் பழக்கடை மூர்த்தி!
பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நமோ நாராயணா வெளிப்படுத்திய உடல்மொழியும், நடிப்பும் ரசிகர்களிடையே சுவாரஸ்யமான ஒப்பீடுகளை ஏற்படுத்தியுள்ளன. செஸ் விளையாட்டு, ‘ஹாரி பாட்டர்’ படத்தில் வரும் பறக்கும் துடைப்பம், ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் தோர் எனப் பலவற்றுடன் அவரது நடிப்பை ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், பழக்கடை மூர்த்தி கதாபாத்திரமும் தனி கவனம் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்தக் கதாபாத்திரம் குறித்த பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், இதை மையமாக வைத்து தனியாக ஒரு திரைப்படமே எடுக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நமோ நாராயணா யார்?
இன்று ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ள நமோ நாராயணா, ஆரம்பத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். சினிமா மீதான ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘ஈசன்’, ‘போராளி’, ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘ரஜினி முருகன்’, ‘நாடோடிகள் 2’, ‘ராயன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த நமோ நாராயணாவுக்கு, ‘ஜெயிலர் 2’ படத்தின் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.