சினிமா

மேடையில் உடைந்து அழுத ஜெனிலியா.. ஏன் தெரியுமா?

By Christon
21 Apr 2026, 11:55 AM
ராஜா சிவாஜி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜெனிலியா கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கி நடித்துள்ள 'ராஜா சிவாஜி' திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரித்தேஷ், இத்திரைப்படத்தை உருவாக்குவதில் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் சந்தித்த போராட்டங்களை விவரித்தபோது மேடையில் கண்ணீர் மல்க பேசினார். தனது கணவரின் நீண்ட கால உழைப்பையும், அவர் சிந்திய கண்ணீரையும் கண்ட நடிகை ஜெனிலியா, மேடையிலேயே கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விழாவில் பேசிய ரித்தேஷ் தேஷ்முக், "2016-லேயே சிவாஜி மகாராஜாவாக நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு தடைகளால் அது தள்ளிக்கொண்டே போனது. இப்போதுதான் அதற்கான சரியான நேரம் வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம், ஆனால் எனது கனவை நனவாக்க எனக்குத் துணையாக நின்றவர் என் மனைவி ஜெனிலியா தான்" என உருக்கமாகத் தெரிவித்தார். தனது கனவுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய தூணாக நின்ற ஜெனிலியாவுக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அபிஷேக் பச்சன், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் சல்மான் கான் ஒரு முக்கியச் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மராட்டியப் பேரரசைத் தகர்க்க முயன்ற எதிரிகளுக்கு எதிராகச் சிவாஜி நடத்திய வீரப்போர்களை மிகப்பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுடன் இப்படம் திரையில் கொண்டு வரவுள்ளது.