சினிமா

தற்கொலை செய்து கொண்ட 'பிரேக்கிங் பேட்' நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By Christon
13 Oct 2026, 12:32 PM
'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உலகளவில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற 'பிரேக்கிங் பேட்' (Breaking Bad) வெப் தொடரில் வால்டர் வொயிட் ஜூனியராக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஆர்.ஜே.மிட்டே (RJ Mitte - 34) நேற்று (அக்.13) காலமானார். டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் பகுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிஜ வாழ்க்கையிலேயே மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்டிருந்த ஆர்.ஜே.மிட்டே, தனது சொந்த அனுபவங்களையே கதாபாத்திரத்தின் உருவாக்கத்திற்குப் பயன்படுத்தினார். 'பிரேக்கிங் பேட்' தொடரில் ஊன்றுகோல்களைப் பயன்படுத்தி நடக்கும் 'ஃப்ளின்' என்ற வால்டர் வொயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

வேதியியல் ஆசிரியராக இருந்து போதைப்பொருள் உலகத்திற்குச் செல்லும் தந்தைக்கும், அவரது மகனுக்கும் இடையே நடக்கும் சிக்கலான உறவை இவர் தனது இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார். 2008 முதல் 2013 வரை ஒளிபரப்பான இத்தொடர், 16 எம்மி விருதுகளை வென்று உலகின் சிறந்த நாடகத் தொடர்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தொடரில் உள்ள சில கதாபாத்திரங்களின் ரெஃபரன்ஸ் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிப்பைத் தாண்டி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் ஆர்.ஜே.மிட்டே தீவிரமாகப் பணியாற்றினார். மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பல தொண்டு நிறுவனங்களில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அத்துடன், திரைத்துறையில் மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கான திரை நடிகர்கள் கூட்டமைப்பின் (Screen Actors Guild) செய்தித் தொடர்பாளராகவும், ஐக்கிய மூளை முடக்குவாத அமைப்பின் தூதராகவும் செயல்பட்டார்.

2021-ல் வெளியான 'டிரையம்ப்' (Triumph) திரைப்படத்திலும் மூளை முடக்குவாத பாதிப்புடன் மல்யுத்தம் செய்யும் உயர்நிலைப் பள்ளி மாணவராக நடித்திருந்தார். திரைக்கு முன்னாலும் பின்னாலும் அவர் ஆற்றிய பணிகள், திரைத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகாரத்தையும் உள்ளடக்கத்தையும் அதிகரிக்கப் பெரிதும் உதவியாக இருந்தன. அவரது மறைவு திரைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.