சினிமா

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதல்.. வதந்தியா? உண்மையா?

By Christon
18 May 2026, 01:18 PM
நடிகை ஸ்ரீலீலாவும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் டேட்டிங் செய்வதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகை ஸ்ரீலீலா மற்றும் இந்தியக் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஆகிய இருவரும் காதலிப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, நடிகையின் தாயார் டாக்டர் ஸ்வர்ணலதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

'பகவந்த் கேசரி', 'புஷ்பா 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீலீலாவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவின. இந்நிலையில், இந்தச் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் ஸ்ரீலீலாவின் தாயார் ஸ்வர்ணலதா தெரிவித்துள்ளார்.

வதந்திகளுக்குக் காரணமான சம்பவங்கள்

கடந்த 2025 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோயிலுக்கு ஸ்ரீலீலா சென்றிருந்தபோது, திலக் வர்மாவும் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்தார். அதேபோல், வான்கடே மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியைக் காண ஸ்ரீலீலா சென்றிருந்தபோது, அவரது குழுவைச் சேர்ந்த ஒருவர் திலக் வர்மாவின் ஜெர்சியை அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் தற்செயலாக நடந்தவை என்றும், இதைக் கொண்டு சமூக வலைதளங்களில் தேவையற்ற கதைகள் உருவாக்கப்பட்டு விட்டன என்றும் அவரது தாயார் விளக்கியுள்ளார்.

படிப்பு மற்றும் சினிமாவில் கவனம்

ஸ்ரீலீலாவின் தற்போதைய திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "ஸ்ரீலீலா ஜூன் மாதம் நடைபெறவுள்ள நீட்-பிஜி (NEET-PG) மருத்துவ மேற்படிப்புத் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். தற்போது அவரது முழு கவனமும் படிப்பு மற்றும் சினிமா மீதே உள்ளது. இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது; அவர் தனது படிப்பையும் திரைப்பயணத்தையும் மிகச்சரியாகக் கையாண்டு வருகிறார்" என்று கூறியுள்ளார்.