பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானது. அந்த அறைகளில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் . முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன்; இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?