யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம்.. அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

Jan 9, 2025 - 13:01
Jan 9, 2025 - 13:02
 0
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம்.. அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் யுஜிசிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று கூடியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பள்ளிக் கல்வியை சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து மத்திய அரசு திணிக்கிறது. அரசு பொதுத்தேர்வு என்ற பெயரில் வடிகட்டி வடிகட்டி அனைவரின் கல்வியையும் தொடர முடியாமல் செய்யப்போகிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. 

நீட் தேர்வு மூலம் மருத்துவ கனவை சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால், ஆண்டு தோறும் ஆள் மாறாட்டம்  போன்ற எல்லா முறைகேடுகளும் நடக்கும் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது. இதேபோல, பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. 

துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வு குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று பல்கலைக்கழக மானிய குழு (UGC) விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது பல்கலைக்கழங்களை சிதைக்கும் காரியமாக தான் முடியும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. 

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் தேர்வு குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைக்கும் உறுப்பினர்களை ஆளுநர் பரிந்துரைத்தார். நான் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு எட்டப்பாடாத நிலையில் தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குவது சரியும் அல்ல முறையும் அல்ல. மாநில அரசுகள் தங்கள் பொருளாதார வளத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்து கொள்ளும் முயற்சியாகவே இதை கருத வேண்டி இருக்கிறது. 

இந்த விதிமுறை கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும். மத்திய அரசு கல்வித்துறையில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை.  தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலே அதிக அளவு கொண்டிருக்கும் தமிழ்நாடு, கல்வி நிறுவனங்களில்  தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அப்படி இருக்கவும் முடியாது. 

கல்வியையும் மக்களையும் காக்க எதிர்கால தலைமுறையினரையும் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow