போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர்.. தவறி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Sep 4, 2024 - 08:33
 0

ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன் பட்டியைச் சேர்ந்த காளிக்குமார் வேனில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த  நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை ஆயுதங்களால் சராமாரியாக தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீசார் டி.எஸ்.பி. காயத்ரியை அவர்களிடமிருந்து மீட்டனர். அதனைத்தொடர்ந்து பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 7 பேரை கைது செய்துள்ளனர். 

இதனிடையே வேன் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் செம்பொன் நெருஞ்சி கிராமத்தை லட்சுமணன், அருண்குமார், காளீஸ்வரன் மற்றும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் திருச்சுழி அருகே அம்பனேரி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களில் காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காளீஸ்வரனுக்கு கை முறிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து போலீசார் காளீஸ்வரனை பாதுகாப்பாக மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபின், அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow