ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கார்க்கு தீவு அருகே எண்ணெய் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டேங்கர் கப்பல் மீது 4 ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் புகை மூட்டம் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் அரசுத் தரப்பில் இத்தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் 30 முதல் அமெரிக்கா ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாராக் தீவு, வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் இருநாடுகளும் மாறி மாறி நடத்தி வரும் தாக்குதல்களால் வணிகக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.