உலகம்

மிரட்டல் விடுத்த டிரம்ப்.. பாலையா பட சீனைக் காட்டி கலாய்த்த ஈரான்!

By Christon
23 Sep 2026, 09:43 PM
பாலையா பட காட்சியை பகிர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம் போல ஈரானை "ஒழித்துக்கட்டி விடுவேன்" என எச்சரிக்கை விடுக்க, ஜிம்பாப்வேயில் உள்ள ஈரானிய தூதரகமோ பாலையா பட காட்சியைப் பகிர்ந்து டிரம்பை கிண்டல் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சைக் கலாய்க்கும் வகையில் மீம்களைத் தட்டிவிட்ட ஈரானிய தூதரகம், "ஈரானை அழிக்கப் போவதாக டிரம்ப் பேசுகிறார். ஆனால் ஈரான் ஒன்றும் அத்தனை பலவீனமான நாடு இல்லை என்பது அவருக்கும் தெரியும். சமீப காலமாக அமெரிக்க நிர்வாகத்தினர் ஹாலிவுட் படங்களை விட்டுவிட்டு பாலிவுட் /இந்தியப் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறது!" என நக்கலாகப் பதிவிட்டுள்ளது.

அத்துடன் நிற்காமல், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) நடித்த 'பகவந்த் கேசரி' படத்தில் வரும் துப்பாக்கிகள், கவசங்கள் சூழ நிற்கும் 58 வினாடி மாஸ் ஆக்ஷன் காட்சியைப் பகிர்ந்து, "எங்ககிட்டயும் சரக்கு இருக்கு" பாணியில் பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், "ஈரான் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் ஒப்பந்தத்தைச் செய்வதா, அல்லது அந்த நாட்டை ஒரேடியாக அழித்து ஒழிப்பதா என்ற பெரிய முடிவை நான் எடுக்க வேண்டியிருக்கிறது" என மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த ஏழு மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் வேளையில் டிரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது.

ஒருபுறம் டிரம்ப் மிரட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் நியூயார்க் வந்த ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானின் குழுவினருடன் கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தில் 3 மணி நேர ரகசியப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள துறைமுக முற்றுகையை விலக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது. இந்தச் சந்திப்பு நேர்மறையாக இருந்ததாகவும், விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.