உலகம்

"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ரெடி.. ஆனால்.." அமெரிக்காவிடம் DEMAND வைக்கும் ஈரான்!

By Christon
22 Sep 2026, 08:29 PM
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
அமெரிக்கா தன் மீதான ராணுவ அழுத்தத்தைக் குறைத்து, ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்கிக் கொண்டால், அடுத்த 7 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஈரானிய உயர்மட்டக் குழு, அமெரிக்காவுடன் மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான முழு அதிகாரத்துடன் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இந்தப் பிரச்சினையை ராஜதந்திர ரீதியில் தீர்க்க விரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவிற்கு தூதரகப் பாதைக்குத் திரும்புவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஈரான் குறிப்பிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஐ.நா கூட்டத்தில் ஈரானுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த நிச்சயம் வழிவகுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் ராணுவத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்று ஈரானிய ராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், ஐ.நா கூட்டத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க மாட்டார் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஈரானிய அதிபரின் பிரதிநிதிகள் தங்கும் விடுதிக்கும் ஐ.நா தலைமையகத்திற்கும் இடையே மட்டுமே செல்ல அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஈரானிய அதிபரின் செய்தித் தொடர்புக் குழுவினருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.

இருப்பினும், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராஃபிச்சிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 14 முதல் ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா மீண்டும் முற்றுகையைத் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கும் நிலைக்குச் சென்றுள்ள நிலையில், இரு நாடுகளும் இறங்கி வரத் தயாராக இல்லாததால் இந்த வட்டாரத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.