ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
உலகளவில் முடங்கிய எண்ணெய் விநியோகம்
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உலகளவிலான முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான 'ஹார்முஸ் நீரிணை'ப் பாதையை ஈரான் முடக்கியுள்ளது.
உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த மூலோபாய நீர்வழிப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீர்வழிப்பாதை முடக்கப்பட்டதால், உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து, சர்வதேச அளவில் எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
ஈரானின் 7 நாள் கெடு
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி 7 நாள் கெடுவுடன் கூடிய முன்மொழிவை முன்வைத்தார். ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுவது மற்றும் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்குவது ஈரானின் கோரிக்கைகளாக இருந்தன.
இருப்பினும், இந்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைக் கைப்பற்ற முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்.
'டிரம்ப் நீரிணை'
இந்த மோதல்களுக்கு மத்தியில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹார்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு, அதனை "டிரம்ப் நீரிணை" (Trump Strait) எனக் குறிப்பிட்டுள்ள ஒரு வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'டிரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுப் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், தற்போதைய கடற்படை முற்றுகை மூலம் அமெரிக்காவே முழுமையாகக் கட்டுப்படுத்துவதால், அதனை அமெரிக்கப் பிராந்தியமாக அறிவிப்பது நல்ல யோசனை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பதிவும் அறிவிப்பும் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.