உலகம்

முடிவுக்கு வரும் ஈரான் போர்? டிரம்ப் கூறுவது என்ன?

By Christon
10 Sep 2026, 09:18 AM
ஈரான் போர் விரைவில் முடிவு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், சர்வதேச அரசியல் சூழல்கள் மற்றும் போர் நிலவரங்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ரஷ்யா - உக்ரைன்

ரஷ்ய அதிபர் புடினுடன் மிகச் சிறந்த முறையில் உரையாடல் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அவர் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தத்திற்கு முன்வந்தால் அது வரவேற்கத்தக்கது என்றும், இரு தலைவர்களுக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட வெறுப்புணர்வே ஒப்பந்தம் தாமதமாவதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் மீது குற்றச்சாட்டு

ஈரானால் இனிமேலும் போரைத் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிவித்த டிரம்ப், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயன்று வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஈரானின் ஒன்பது கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் செயலிழக்கச் செய்யப்பட்டு, அதில் பெரும்பாலானவை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்தாக்குதல்களுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்றும், இதுபோன்று மேலும் பல நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெறும் அணுசக்தி ஒப்பந்தத்தையும் தாண்டிப் பல்வேறு விவகாரங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவது 99.9 சதவீதம் உறுதி எனத் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு பரிசீலனையில் இல்லாத பல புதிய அம்சங்களும் தற்போது பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈரான் ஆட்சி விரைவில் வீழும்; நெதன்யாகு

இதனிடையே, தெற்கு சிரியாவில் உள்ள படைமுகாமிற்குப் பார்வையிடச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் பயங்கரவாத ஆட்சி விரைவில் வீழும் என்றும், அந்த இலக்கை தாங்கள் நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ஈரானின் ஐந்து எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்ததைத் தொடர்ந்து அமெரிக்க-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்தது. அமெரிக்கக் கடற்படை கப்பல்களைத் தாக்க ஈரான் முயலும் போதெல்லாம் அவர்களின் டேங்கர்கள் அழிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.