தமிழ்நாடு

விஜய் கையால் தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’... தயாரான 1,106 தங்க மோதிரங்கள்!

By Sumalekha
21 Sep 2026, 05:18 PM
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை வரும் செப். 28-ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக சுமார் 1,106 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கடந்த ஜூன் 23-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்குப் பொருந்தும் என்றும், இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் செப். 28-ம் தேதி உசிலம்பட்டியில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதால், பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள 1,106 ‘தாய்மாமன் தங்க மோதிரங்கள்’, முதற்கட்டமாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்க மோதிரங்களை வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க உசிலம்பட்டியைத் தேர்வு செய்திருப்பது எங்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தை உசிலம்பட்டியில் தொடங்கி வைப்பது பிரமிப்பாகவும், உசிலம்பட்டி மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என நம்புகிறேன். உசிலம்பட்டியை எப்போதுமே பின்தங்கிய பகுதி என ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், ஒரு வார்த்தைக்குக் கூட அவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்காக உசிலம்பட்டியைத் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் தங்கள் ஊருக்கு வந்து இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதால், உசிலம்பட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.