தமிழ்நாடு

TN Weather: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை அப்டேட்!

By Christon
25 Sep 2026, 02:57 PM
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 16 மாவட்டங்களில் இன்று (செப்.25) இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், நேற்று நிலவிய தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை அளவில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (25-09-26) 0830 மணி அளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது.

மிதமான மழை

இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்.26): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்.27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.