தமிழ்நாடு

டெங்குவை தொடர்ந்து உண்ணிக் காய்ச்சல்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!

By Sumalekha
21 Sep 2026, 10:38 AM
தமிழ்நாட்டில் டெங்குவை தொடர்ந்து, பாக்டீரியா தொற்று நோயான உண்ணிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதால் இதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்,உண்ணிக் காய்ச்சல் என்ற புதிய நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 17,000பேர் டெங்கு காய்ச்சலிலும் 4,619 பேர் உண்ணி காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டதாக சுகாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

உண்ணிக் காய்ச்சல் என்றால் என்ன?

(scrub typhus அல்லது tick fever) என்பது புல்,புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் காணப்படும் மிகச்சிறய உண்ணிகள் (chigger mites) மனிதர்களைக் கடிப்பதால் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று நோயாகும்.

பாக்டீரியா தொற்று:

ஒரியண்டியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால்வ இது உண்டாகிறது.

பரவும் முறை:

உண்ணிகள் மனிதர்களைக் கடிக்கும் போத அவற்றின் உடலில் உள்ள பாக்டீரியா இரத்தத்தில் கலந்து காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

முக்கிய அறிகுறிகள்:

அதீத காய்ச்சல் மற்றும் நடுக்கம்

கடுமையான தலைவலி மற்றும் உடல்வலி

தீவிர சோர்வு

உண்ணிக் கடித்த இடத்தில் கருப்பு நிறத்தில் ஒரு சிறிய தழும்பு அல்லது புண் ஏற்படுதல்

சிலருக்கு கடித்த இடத்தைச் சுற்றியுள்ள நிணநீர்க் குழாய்களில் நெறிகட்டுதல்


சிகிச்சை மற்றும் பாதுகாப்பு:

ஆரம்பத்திலேயே பரிசோதித்து தகுந்த எதிர்பாக்டீரியா மருந்துகளை உட்கொண்டால் இதை முழுமையாகக் குணப்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நுரையீரல் மற்றும் இதர உறுப்புகளைப் பாதித்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

இப்படி உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு மக்களை இப்படி அச்சுறுத்தி வரும் நிலையில், உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு குறித்து பொதுசுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு வெளியிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச்சுகாதாரத்துறை வெளியிட்டு காணொலியில் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

உண்ணிக் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு பருவநிலை மாற்றத்தாலும், வடகிழக்கு பருவமழை காரணங்களாலும் பல்வேறு வகையான நோய்கள் மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இதில் மக்களுக்கு தெரிந்த வியாதி டெங்கு காய்ச்சல். இதை தவிர்த்து ஒரு சில காய்ச்சல் மக்களிடையே பரவி வரும் நிலையில்,தற்போது ஒருவகையான காய்ச்சலாக 'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்து பரவி வருகின்றன.

இந்த 'ஸ்க்ரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு, உண்ணிக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் ஒட்டுண்ணியாகவும், பூச்சியாகவும் வாழ்கிறது.

இது பொதுவாக காட்டுப்பகுதியில் வேலை பார்க்கும் பொதுமக்கள், தொழிலாளிகள் மற்றும் வயல்களில் வேலை பார்ப்பவர்களுக்குதான் ஒரு காலத்தில் பரவி வந்தது. ஆனால், தற்போது மக்கள் இடம் பெயர்வதாலும், பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகி இதற்கான சிகிச்சையை பெற்று கொள்ள வேண்டும்.  இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தவுடன் மருந்தகங்களில் சென்று மருந்துகள் வாங்கி  4-5 நாட்கள் கழித்து மருத்துவனை வருகிறார்கள். ஆனால் அப்படி செய்யாமல் காய்ச்சல் வந்தவுடன் உடனே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் திடீரென அதிகமாக வந்து உடல்வலி, தலைவலியோடு வந்தால் உடனடியாக எந்த அரசு மருத்துவமனைக்கும் வரலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள். மருத்துவர்கள் உடனடியாக மருந்துகள் தந்தால் முற்றிலும் குணமாக்கக் கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.