சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும், திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் காரசாரமாக உரையாற்றினார்.
சட்டம் - ஒழுங்கு குறித்து விளக்கம்
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "ஒரு தனிப்பட்ட குற்றம் நடந்துவிட்டது என்பதற்காகவே, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. தனிப்பட்ட சம்பவங்களுக்கும் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கிற்கும் வித்தியாசம் உள்ளது. எந்தவொரு குற்றமும் கடந்த 100 நாட்களில் திடீரென உருவானது அல்ல.
அதன் பின்னணியில் குடும்பப் பிரச்சினை, சொத்துத் தகராறு, போதைப்பொருள் பயன்பாடு, கடந்த காலத்தில் சட்டத்தின் மீது பயமில்லாமல் இருந்தது மற்றும் பல்வேறு சமூகக் காரணிகள் இருக்கலாம். எனவேதான், குற்றம் நடந்த பிறகு பேரவைக் கூச்சலிடுவதை விட, குற்றம் உருவாகும் சூழலையே முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை இலக்காகக் கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
நாகரிகற்ற பேச்சுகளுக்குக் கண்டனம்
எதிர்க்கட்சியினரின் பேச்சு குறித்துச் சாடிய அவர், "அரசியல் லாபத்திற்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம். ஆபாசப் பேச்சுகளும் வன்மமும்தான் இங்கு நீடிக்கின்றன. வீடுகளில் உள்ள பெண்களை மனதில் வைத்துப் பேச வேண்டும். சட்டசபைக்குள் வந்து 'எலும்பை உடைப்பேன்' என்றும், மக்களுக்கு நல்ல சாவு வராது என்றும் பேசுகிறார்கள். இத்தகைய பேச்சுகளால்தான் அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களின் தீர்ப்பைக்கூட ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், "மிசா காலத்தைப் பற்றிப் பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். ஆனால் மிசா பற்றிய வரலாறு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி டெண்டர் விவகாரத்தில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
திமுக எது செய்தாலும் அதை ஒரு குடும்பமாகத்தான் செய்வார்கள். ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் 'நாங்கள் ஊழல் செய்யவில்லை' என்று அவர்கள் ஒருபோதும் சொல்வதில்லை; மாறாக 'ஆதாரம் இருக்கிறதா?' என்றுதான் கேட்பார்கள். திமுகவினர் ஆதாரம் கேட்டால், 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றாலும் தோண்டி எடுத்து வருவோம்" என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.