தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடக்கத் தேதி மற்றும்
இந்த நிலையில், இத்திட்டம் தொடங்கப்படும் தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தாய் மாமன் சீர் வரிசை வழங்கும் பழக்கம் உசிலம்பட்டி பகுதியில் மிகவும் புகழ்பெற்றது என்பதால், இத்திட்டத்தை அங்கிருந்து தொடங்குவது சிறப்பாக இருக்கும் என முதலமைச்சர் விரும்பியதாகவும் கூறப்பட்டது.
அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்
இதையடுத்து, தாய்மாமன் தங்கமோதிர திட்ட தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது இத்திட்டம் குறித்துப் பேசிய அவர், "'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள தங்கத்தின் தரத்தில் எந்தவிதமான குறையும் இருக்காது. அவை 916 ரகத் தங்கம் தானா என்பது முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே விநியோகத்திற்கு அனுப்பப்படும். மேலும், பயனாளிகளும் தாங்கள் பெறும் மோதிரத்தின் தரத்தைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள முழு உரிமையுண்டு" எனத் தெரிவித்தார்.
திட்டம் தள்ளிப்போகக் காரணம்
தொடர்ந்து திட்டத் தொடக்கம் குறித்து விளக்கிய அமைச்சர், "செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகத் திட்டம் தொடங்கும் தேதி தள்ளிப்போகிறது. இதனால் ஏற்கனவே திட்டமிட்ட நாளில் இத்திட்டத்தைத் தொடங்க இயலவில்லை. இத்திட்டம் முறைப்படித் தொடங்கப்படும் புதிய தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் கூறினார்.