தமிழ்நாடு

ரூ.17 லட்சம் அபராதம் வசூல்... அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு செக் !

By Sumalekha
12 Sep 2026, 09:25 PM
பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2,379 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு

பயணிகளின் புகார்களை தொடர்ந்து, போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய சுங்கச்சாவடிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,379 ஆம்னி பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

400 பேருந்துகளுக்கு இ-சலான்

சோதனையில் பயணிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலித்தது, போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 400 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விதிமீறலில் ஈடுபட்ட பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.16.93 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தகுதிச் சான்றிதழ் இல்லாத பேருந்துகள் பறிமுதல்

கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பயணிகள் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் விதிமீறல்களில் ஈடுபட்ட பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீவிர விதிமீறலில் ஈடுபட்ட 7 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் ரத்து செய்தால் கடும் நடவடிக்கை

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை சில நிறுவனங்கள் ரத்து செய்து, பின்னர் அதிக கட்டணத்தில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று பயண வசதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்களின் அனுமதி சான்றிதழ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளிடம் முறைகேடு செய்தல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக போக்குவரத்துத் துறையை அணுகலாம்.

இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் "1800 425 6151" அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பயணிகள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.